Tuesday, April 29, 2008

அதீத வளர்ச்சியை நோக்கி ஆன்லைன் விளம்பரங்கள்

12
இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடியையும் தாண்டிவிட்ட நிலையில், இணையதள வங்கி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் பெருகிவந்த போதிலும், ஆன்லைன் விளம்பர வருவாயோ நோஞ்சானாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது ரூ.250 கோடி சந்தையாக உள்ள ஆன் லைன் விளம்பரச்சந்தை 2011-ம் ஆண்டில் 10 மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுற்றுலாத் துறைக்கு அடுத்தபடியாக ஆன் லைன் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்யும் துறைகள் வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை ஆகிய நிதி தொடர்பான நிறுவனங்களே.
மும்பையில் உள்ள முன்னணி தேடல் எந்திர மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் அடங்கிய பி.எஃப்.எஸ்.ஐ துறைகள் ஆன்லைன் விளம்பரச் செலவுகளை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
முன்பெல்லாம் காப்பீடு முகவர் மூலம் நடந்து வந்த பாலிசி விற்பனைகள் தற்போது காப்பீடு நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பர பேனர்கள் மூலமே அதிகம் நடைபெறுவதாக அவர் தெரிவிக்கிறார்.
தேடல் எந்திரங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விழும் கிளிக் எண்ணிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
அவிவா காப்பீட்டு நிறுவனம் தனது விளம்பரச் செலவுகளில் 5 சதவீதத்தை ஆன்லைன் விளம்பரங்களுக்காக செலவு செய்வதாக அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் விஷால் குப்தா தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இணைய தளங்கள் மூலமே செய்து வருவதால், ஆன் -லைன் மட்டுமல்லாது எந்த ஒரு டிஜிட்டல் மீடியாவிலும் விளம்பரங்களைக் கொடுக்க நிதி சார்ந்த நிறுவனங்கள் தயங்குவதில்லை.
மேலும் இணையதள விளம்பரங்கள் மூலம் இந்த நிதிச்சேவை, காப்பீட்டு, வங்கிகளின் வர்த்தக வருவாய் 100 முதல் 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
செலவுகளும் இதனால் குறைவதால் இதன் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வலைப்பதிவாளர்களுக்கான டிப்ஸ்


12
இணையதளம்
'பிளாக்ஸ்' (Blogs)... இணையதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஆங்கிலவார்த்தை இது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு Blog-ஐ (வலைப்பதிவுத்தளம்) உருவாக்கிக் கொள்ளலாம்.
உலகம் முழுதும் பல லட்சம் பேர் வலைப்பதிவுகளில் தீவிரமாக எழுதி வருகின்றனர். இதில் உங்கள் எழுத்துக்களுக்கான வாசகர்களை தக்கவைப்பது சற்று கடினமான காரியம் தான்.
சிலருக்கு எழுதுவது என்றால் பிடிக்கும். இதன் காரணமாக வீட்டில் டைரி எழுதுவதற்கு பதிலாக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கென்று ஒரு தனி வாசகர்(கள்) வட்டம்.
நீங்கள் பிரபலமானவராக இருந்தால், உங்கள் வலைத்தளத்தில் பாட்டி வடை சுட்ட கதையை எழுதினால் கூட நிறைய பேர் வந்து படிப்பார்கள். உங்களை யாரென்றே தெரியாத போது நீங்கள் அர்த்தமுள்ள விஷயங்களை படு ஆழமாக அலசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
எழுதுவதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சியை மேற்கொண்டால் நீங்கள் சொல்ல வருவதை ஏற்கன்வே பலர் கூறியிருப்பார்கள் என்பதை அறியலாம். யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட பிறகு மோசமான எழுத்துக்களும் வலைப்பதிவுத் தளங்களில் தற்போது குப்பை லாரி போல் குவிந்து வருகிறது.
ஆன்லைனில் கிடக்கும் விஷயதாரங்களில் உங்கள் எழுத்திற்கென்று ஒரு பிரத்யேக கும்பலை திரட்டுவது என்பது கடினம்தான். இருப்பினும் கீழ்வரும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்:
1. எதைப்பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கமாக கூறி விட வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையின் சிறுசிறு தகவல்களை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள் என்று கூற முடியாது. உங்களுக்கு அது சுவையாக தெரியலாம். ஆனால் வாசகர்கள் உங்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே பலதரப்பட்ட விஷயங்கள் பற்றியும் தனிச் சிறப்பாக உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் அதை புரியும் படியாக முதலில் எழுத வேண்டும். உங்கள் எல்லை எது என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டு அதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
2. உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அனைத்து விவரங்களையும் உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது அவசியம். மேற்கோள் காட்டும்போதும், புள்ளி விவரங்களை அளிக்கும்போதும் அதனை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதால் உங்கள் வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மை கூடும். சீரான வலைப்பதிவாளர் என்ற பெயரை வாசகர்களிடையே உருவாக்க உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உலகின் மிகச்சிறிய கணினி அறிமுகம்


உலகின் மிகச்சிறிய தனிநபர் கணினியை (personal computer), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கான தீர்வைகளை வழங்கி வரும் ஜப்பான் நிறுவனமான புஜிட்சு (Fujitsu) அறிமுகப்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் நடந்த விழாவில் புஜிட்சு நிறுவனத்தின் இணை இயக்குனர் இவான் கம், இந்த சிறிய கணினியை அறிமுகப்படுத்தினார்.
63 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த நவீன தனிநபர் கணினியில், 3.5 ஜி மொபைல் பிராட்பேண்ட் (3.5 G mobile broadband) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது தனிநபர் கணினி மற்றும் மடிக்கணினிகளை சுமந்து செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, மிகச் சிறிய அளவில், பயணத்தின் போது எளிதில் கொண்டு செல்லக்கூடிய வகையில், இந்த சிறிய கணினியை வடிவமைத்துள்ளதாக புஜிட்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரத்திற்குள் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது பேசும் கம்ப்யூட்டர்

மனிதர்களுடன் நேரடியாகப் பேசக்கூடிய புதிய கம்ப்யூட்டர்கள் விரைவில் வெளிவர உள்ளன.
மனிதர்களின் குரல் ஏற்றஇறக்கங்கள், முகபாவனைகளை உணர்ந்து அதற்கேற்ப சிக்னல்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் பேசும் கணினிகளை உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது.
பெல்பாஸ்ட் நகரில் குயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சென்சிடிவிவ் ஆர்டிபிசியல் லிசனர் சிஸ்டம் என்ற பெயரில் இந்த கணினியை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய திட்டமான சீமெய்ன்-ன் ஒரு பகுதியாக இந்த பேசும் கணினி உருவாக்கப்படுகிறது.
குரல், முகபாவனைகளுக்கு ஏற்ப அந்தக் கணினி சம்பந்தப்பட்ட நபருடன் விவாதத்தில் ஈடுபடும். கணினி பயனரின் பல்வேறு நடத்தைகளுக்கு ஏற்ப அந்தக் கணினி செயலாற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பரிமாணங்களில் நாம் பேசுவது, எந்தமாதிரியான பேச்சுகள் சுவாரசியமானவை, எவை அலுப்புத் தட்டுபவை போன்ற அனைத்து பாவனைகளும் கணினி உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.