Tuesday, April 29, 2008

புதிய வலைப்பதிவாளர்களுக்கான டிப்ஸ்


12
இணையதளம்
'பிளாக்ஸ்' (Blogs)... இணையதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஆங்கிலவார்த்தை இது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு Blog-ஐ (வலைப்பதிவுத்தளம்) உருவாக்கிக் கொள்ளலாம்.
உலகம் முழுதும் பல லட்சம் பேர் வலைப்பதிவுகளில் தீவிரமாக எழுதி வருகின்றனர். இதில் உங்கள் எழுத்துக்களுக்கான வாசகர்களை தக்கவைப்பது சற்று கடினமான காரியம் தான்.
சிலருக்கு எழுதுவது என்றால் பிடிக்கும். இதன் காரணமாக வீட்டில் டைரி எழுதுவதற்கு பதிலாக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கென்று ஒரு தனி வாசகர்(கள்) வட்டம்.
நீங்கள் பிரபலமானவராக இருந்தால், உங்கள் வலைத்தளத்தில் பாட்டி வடை சுட்ட கதையை எழுதினால் கூட நிறைய பேர் வந்து படிப்பார்கள். உங்களை யாரென்றே தெரியாத போது நீங்கள் அர்த்தமுள்ள விஷயங்களை படு ஆழமாக அலசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
எழுதுவதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சியை மேற்கொண்டால் நீங்கள் சொல்ல வருவதை ஏற்கன்வே பலர் கூறியிருப்பார்கள் என்பதை அறியலாம். யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட பிறகு மோசமான எழுத்துக்களும் வலைப்பதிவுத் தளங்களில் தற்போது குப்பை லாரி போல் குவிந்து வருகிறது.
ஆன்லைனில் கிடக்கும் விஷயதாரங்களில் உங்கள் எழுத்திற்கென்று ஒரு பிரத்யேக கும்பலை திரட்டுவது என்பது கடினம்தான். இருப்பினும் கீழ்வரும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்:
1. எதைப்பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கமாக கூறி விட வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையின் சிறுசிறு தகவல்களை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள் என்று கூற முடியாது. உங்களுக்கு அது சுவையாக தெரியலாம். ஆனால் வாசகர்கள் உங்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே பலதரப்பட்ட விஷயங்கள் பற்றியும் தனிச் சிறப்பாக உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் அதை புரியும் படியாக முதலில் எழுத வேண்டும். உங்கள் எல்லை எது என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டு அதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
2. உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அனைத்து விவரங்களையும் உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது அவசியம். மேற்கோள் காட்டும்போதும், புள்ளி விவரங்களை அளிக்கும்போதும் அதனை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதால் உங்கள் வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மை கூடும். சீரான வலைப்பதிவாளர் என்ற பெயரை வாசகர்களிடையே உருவாக்க உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.