Tuesday, April 29, 2008

அதீத வளர்ச்சியை நோக்கி ஆன்லைன் விளம்பரங்கள்

12
இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடியையும் தாண்டிவிட்ட நிலையில், இணையதள வங்கி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் பெருகிவந்த போதிலும், ஆன்லைன் விளம்பர வருவாயோ நோஞ்சானாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது ரூ.250 கோடி சந்தையாக உள்ள ஆன் லைன் விளம்பரச்சந்தை 2011-ம் ஆண்டில் 10 மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுற்றுலாத் துறைக்கு அடுத்தபடியாக ஆன் லைன் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்யும் துறைகள் வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை ஆகிய நிதி தொடர்பான நிறுவனங்களே.
மும்பையில் உள்ள முன்னணி தேடல் எந்திர மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் அடங்கிய பி.எஃப்.எஸ்.ஐ துறைகள் ஆன்லைன் விளம்பரச் செலவுகளை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
முன்பெல்லாம் காப்பீடு முகவர் மூலம் நடந்து வந்த பாலிசி விற்பனைகள் தற்போது காப்பீடு நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பர பேனர்கள் மூலமே அதிகம் நடைபெறுவதாக அவர் தெரிவிக்கிறார்.
தேடல் எந்திரங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விழும் கிளிக் எண்ணிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
அவிவா காப்பீட்டு நிறுவனம் தனது விளம்பரச் செலவுகளில் 5 சதவீதத்தை ஆன்லைன் விளம்பரங்களுக்காக செலவு செய்வதாக அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் விஷால் குப்தா தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இணைய தளங்கள் மூலமே செய்து வருவதால், ஆன் -லைன் மட்டுமல்லாது எந்த ஒரு டிஜிட்டல் மீடியாவிலும் விளம்பரங்களைக் கொடுக்க நிதி சார்ந்த நிறுவனங்கள் தயங்குவதில்லை.
மேலும் இணையதள விளம்பரங்கள் மூலம் இந்த நிதிச்சேவை, காப்பீட்டு, வங்கிகளின் வர்த்தக வருவாய் 100 முதல் 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
செலவுகளும் இதனால் குறைவதால் இதன் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.